தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்த நிலையில், உதகையில் கனமழையால் ரயில்வே பாலத்தில் 5 அடி உயரத்துக்கு நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் இன்று மிக கனமழையும், 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு நேற்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், உதகையில் கனமழை கொட்டியது.
உதகையிலிருந்து படகு இல்லம் மற்றும் காந்தள் செல்லக் கூடிய சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின்கீழ், 5 அடி உயரத்துக்கு மழைநீர் குளம்போல் தேங்கியதால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 மணிநேரமாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனஓட்டிகள் அவதியடைந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




