--- --:--:-- --

அகமதாபாத் விமான விபத்தில் வெளியான மற்றொரு சோகம்!

1

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று பகல் 1.39 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33-வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர்.

 

அகமதாபாத் விமான நிலையத்தில் 23-வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு மேலெழும்ப முடியாமல் தாழ்வாகப் பறந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை.

 

இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுகீஸைச் சேர்ந்த 7 பேர், 2 விமானிகள், 10 பணியாளர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்தனர். இந்த விமான விபத்தில் சிக்கி குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது.

 

முன்னதாக விமானம் அகமதாபாத் விமான நிலையம் அருகில் குடியிருப்புகள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்ததில் விடுதியில் இருந்தவர்களும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 260-ஐத் தாண்டியது. தற்போது உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, DNA சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில், அடையாளம் காணப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், விமான விபத்தில், மருத்துவக் கல்லூரி அருகே டீக்கடை வைத்திருந்த பெண்ணின் 15 வயது மகன் ஆகாஷ் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 9-ஆம் வகுப்பு படித்து வந்த ஆகாஷ் தனது தாய்க்கு மதிய உணவு அளிக்க டீக்கடைக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில், 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

விபத்தில் தீக்காயம் அடைந்த சிறுவனின் தாய் சீதாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாய் வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வார்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் பிரேத பரிசோதனை அறையில் மகன் ஆகாஷின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.இவர்கள் மருத்துவக் கல்லூரி அருகே மரத்தடியில் டீக்கடை நடத்தி வந்திருக்கின்றனர்.

 

இந்த நிலையில் தான் சம்பவம் நடந்தபோது தனது தாய் சீதாபென்னுக்கு மதிய உணவு அளிக்கச் சென்றிருக்கிறார் ஆகாஷ். அதன்படி, சீதாபென் உணவருந்திக் கொண்டிருக்க ஆகாஷ் அருகில் இருந்து மரக்கட்டிலில் தூங்கியிருக்கிறார்.இந்தச் சமயத்தில் விமானம் வந்து மோதி விபத்து ஏற்பட அதில் உண்டான தீயில் சிக்கி ஆகாஷ் உயிரிழந்திருக்கிறார்.

 

தற்போது அவரது உடலைப் பெற குடும்பத்தினர் மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், எத்தகைய நிவாரணம் கொடுத்தாலும், தனது மகனின் இழப்பிற்கு ஈடாகுமா என்று அவரது தந்தையான ஆட்டோ ஓட்டுநர் சூரஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon