--- --:--:-- --

ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று தொடக்கம்

1

துருக்கியில் ரஷ்யா, உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன.

 

அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 30 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிபந்தனையை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

 

பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்துகொண்டால், தான் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். மேலும், ரஷ்யா தரப்பில் பங்கேற்கும் குழு அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ரஷ்யா தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் அதிபர் புதினின் ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான குழு பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில், துணை வெளியுறவு அமைச்சர், துணை பாதுகாப்புத் துறை அமைச்சர், ராணுவ தலைமை தளபதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.இது ஒருபுறம் இருக்க, இந்தப் பேச்சுவார்த்தையில் தான் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கா தரப்பில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுமா என்று உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon