இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின்!
கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசினர் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 285 ஏக்கர் பரப்பளவிலான கச்சத்தீவு, 1974-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீன் வளம் சூழ்ந்த கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று கொண்டு வர உள்ளார்.
இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுதினம் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அந்நாட்டு அரசுடன் பேசி சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. உறுப்பினர்களின் கருத்துக்களுக்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





