மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஏறுதழுவுதல் அரங்கில், மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளைகளுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளைகளுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதனை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆயிரம் காளைகளும், 650 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் களத்தில் சிறப்பாக செயல்படும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளைத் தழுவும் வீரர்களுக்கும் சைக்கிள், மிக்ஸி, மெத்தை, சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், போட்டியைக் கண்டுகளிக்க செல்லும் மக்களுக்காக பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன .இந்நிலையில், அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரரை களத்திலிருந்து வெளியேறிய காளை முட்டியதில் கச்சிராயிருப்பைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் 25 வயதான மகேஷ் பாண்டி மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி மகேஷ் பாண்டி உயிரிழந்தார்.உயிரிழந்த மகேஷ் பாண்டி சீனாவில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர். இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற நிலையில், மாடு முட்டி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.