--- --:--:-- --

பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 17-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

1

2025ம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 15-ம் தேதி (திருவள்ளுவர் நாள்), ஜனவரி 16-ம் தேதி (உழவர் நாள்) கொண்டப்படுகிறது.

 

பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவர். குறிப்பாக தொடர் விடுமுறை கிடைப்பதால் ஏராளமான மக்கள் பயணம் செய்வார்கள்.முன்னதாக தமிழக அரசானது ஜனவரி 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்திருந்தது.

 

அதேநேரம் அந்த வாரத்தில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளி கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

 

அக்கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளி கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon