200 அல்ல, 234தொகுதிகளும் திமுகவுக்கே – அமைச்சர் சேகர்பாபு

“எங்களின் நம்பிக்கை வீணாகும் என்றும் சில அதிமேதாவிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.” என்று அமைச்சர் சேகர்பாபு விஜயை மறைமுகமாக சுட்டிக்காட்டிப் பேசினார்.

 

சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மேனாள் நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.” என்று திமுகவை சாடி பேசினார்.இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

 

அதில், “200 தொகுதி என்கிற எங்களின் நம்பிக்கை வீணாகும் என்றும் சில அதிமேதாவிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.தமிழகத்தின் அரசியல் தெரியாமல் இருக்கும் சிலருக்கு 2026 தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு. அதில், யாராவது குறையும் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும்” என்று அமைச்சர் சேகர்பாபு விஜயை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார்.மேலும், “அடுக்கடுக்கான திட்டங்களை ஆட்சியில் அள்ளிக் கொடுக்கிற முதல்வரைப் பார்த்து இல்லையென்று கூறுகின்ற கூட்டம் இருக்கிறது.

 

பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வழக்குப் பதிவு செய்வதோடு மட்டுமில்லாமல் நீதி பெற்றுத் தரும் நீதி தேவனின் ஆட்சி” என்றும் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.