நாளை கள்ளக்கடல் நிகழ்வு..கடல்சார் ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட்..!

மிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்த தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களுக்கு கள்ளக்கடல்  குறித்து ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்ததிருக்கிறது கடல்சார் ஆய்வு மையம்.

 

தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியுள்ளது. இதற்கு முன்னரே பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் மேலும் நீடிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 

மறுபுறம் கடலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது திடீரென ராட்சத அலைகள் மேலெழுந்திருப்பதால் கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த கடல் மாற்றத்தை ஆய்வாளர்கள் கள்ளக்கடல் நிகழ்வு என என கூறுகின்றனர். சற்றும் எதிர்பாராத தருணத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் கேரளாவில் இதனை, கள்ளக்கடல் நிகழ்வு என அழைக்கின்றனர்.

 

இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும், எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவே இப்படி கள்ளக்கடல் நிகழ்வு உருவாகக் காரணமாகும். அப்படியான நிகழ்வுதான் தற்போது இந்திய பெருங்கடலில் ஏற்பட்டிருக்கிறது.

 

எனவே நேற்றும் இன்றும் தமிழகத்தின் கடல்சார் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்படிருந்தது. கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 

கள்ளக்கடல் நிகழ்வின் போது கடல் நீர், கடற்கரையை தாண்டி உள்ளே வரும். பலர் சுனாமியுடன் இதனை ஒப்பிட்டு குழப்பிக்கொள்வார்கள். ஆனால், சுனாமி வேறு, கள்ளக்கடல் நிகழ்வு என்பது வேறு. கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்படும்போது கடலில் குளிக்கவோடு, விளையாடவோ கூடாது.

 

கரையில் போதுமான தூரத்தில் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். இன்று கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ள தேங்காய்பட்டிணம் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி அலையில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு கள்ளக்கடல் நிகழ்வுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

 

எனவே நாளை மாலை வரை தமிழக கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று கடல்சார் ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.