EVM முறைகேடுகளுக்கு மனித தலையீடுகள் தான் காரணமாக இருக்க முடியும்..!

விவிபேட் ஒப்புதல் சீட்டுகளை 100 சதவிகிதம் எண்ணுவதற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் சந்தேகங்கள் இருப்பதால், மீண்டும் பழைய முறைப்படி வாக்குச் சீட்டு நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் வாதிட்டார் அல்லது, விவிபேட் இயந்திரங்களில் அச்சாகும் வாக்குகளை, வாக்காளர்கள் தனி பெட்டியில் போடும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றார்.

 

அதற்கு, மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், மனித தலையீடு இல்லாமல் இருந்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கும் என்றும் முடிவுகள் துல்லியாக இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், மனித தலையீடுகள்தான் முறைகேடுகளுக்கு காரணமாக இருக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

 

இதனை தொடர்ந்து, வாதிட்ட பிரசாந்த் பூஷண், விவபேட் ஒப்புதல் சீட்டுகளை எண்ணி முடிக்க கூடுதலாக சில மணிநேரம் மட்டுமே ஆகும் என்றார். அதே சமயம், வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பாஜகவினர் இயக்குநர்களாக உள்ளதால், நம்பகத் தன்மை மீது சந்தேகம் வருவதாக பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.

 

இந்நிலையில், CONTROL UNIT, வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகிய மூன்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும், தனித்தனியாக சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுமா என்று தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் விதம் குறித்தும், அதில் முறைகேடு செய்யாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் நாளை விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.