--- --:--:-- --

சென்னையில் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்த விபத்து

1

சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் தனியார் கேளிக்கை விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியின் முதல் மாடியில் மதுபானக் கூடம் செயல்பட்டு வந்துள்ளது. ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மது அருந்தி கொண்டே போட்டியைப் பார்க்க பலர் முன்பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், நேற்று மாலை 7.15 மணியளவில் மதுக்கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. 20க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த நிலையில் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.இந்த விபத்து குறித்த தகவல் தெரியவந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தீயணைப்பு துறையினரும் நிகழ்விடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

ஐபிஎல் போட்டி 7.30 மணிக்கு தான் தொடங்கும் என்பதால் பலர் வராத நிலையில், முன்பதிவு செய்ததைவிட குறைவானவர்களே அங்கிருந்துள்ளனர். விடுதியில் பணியாற்றிய திருச்சியை சேர்ந்த ஒருவரும், மணிப்பூரைச் சேர்ந்த இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

 

விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் தர்மராஜ் இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கவில்லை என்றார்.விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட மதுபான விடுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

 

விபத்துக்குள்ளான கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் கலவையால் போடப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாகவும், கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்ற வருவதாகவும் கூறினார்.

 

அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , அதுவும் விபத்திற்கான காரணமா? என்பது குறித்தும் உடனடியாக கூறமுடியாது என தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட மதுபான விடுதி உரிய அங்கீகாரம் பெற்று இயங்கி வந்ததாகவும் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon