--- --:--:-- --

கோவையில் சூரியன் உதிக்குமா? கவலையில் உடன்பிறப்புகள்!

2

கொங்கு மண்டலத்தின் ஸ்டார் தொகுதியாக உள்ளது கோவை. அதிமுகவின் கோட்டைக்குள் எப்படியும் ஓட்டைப் போட்டு வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமென்று திமுக முனைப்பில் உள்ளது. ஆனால், அண்ணாமலையை பாஜக நிறுத்தியபின், திமுகவுக்கு கவலை கவ்விக் கொண்டிருக்கிறது.

 

அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகளை பாஜக பிரிக்கும்; அது திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்று உளவுத்துறை ரிப்போர்ட் வந்ததாகவும், அதனால் ஆளுங்கட்சி தரப்பு கவலையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மறுபக்கம் அதிமுகவோ அதிக குஷியுடன் களமிறங்கி, எப்படியும் வெற்றிக்கனியை தட்ட வேண்டுமென்று உற்சாகமாக உலா வருகிறார்கள்.

 

மாநிலத் தலைவரே நிற்கிறார், அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று தாமரைக் கட்சியினரும் சந்து பொந்தாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். என்னதான் அதிகார பலம், பண பலம் இருந்தாலும் மக்கள் மனசு என்னவோ அதிமுக பக்கம் உள்ளதாக வந்த தகவல்களை அடுத்து, தனது வியூகத்தை திமுக மாற்றி அமைத்திருக்கிறது.

 

வார்டு வார்டாகச் சென்று மக்களின் தேவைகள் என்னவென்று கேட்டு, கமுக்கமாக செய்துதர ஏற்பாடு நடக்கிறதாம். இதனால், மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி குறையும் என்று சூரியன் கட்சியினர் கணக்கு போடுகின்றனர். செந்தில் பாலாஜி இல்லாத நிலையில் டி.ஆர்.பி. ராஜா, கோவை தொகுதியை கவனித்து வருகிறார். அவரது வியூகம் திமுகவுக்கு கைகொடுக்குமா என்பது போகப்போகத் தெரியும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon