குஜராத் மாநிலத்தில் உலகளாவிய தொழில்நுட்ப நகரம்..!
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி பல ஆயிரம் கோடி அளவில் முதலீட்டை இந்தியாவிற்கு பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அதில் முக்கியமான ஒன்று தான் கூகுள் நிறுவனத்தின் இந்திய முதலீடு. வாஷிங்டன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்புக்கு பின்னர் குஜராத் மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளதாகவும், இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.
மேலும் இதுகுறித்து பேட்டியளித்த சுந்தர் பிச்சை “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 82 ஆயிரம் கோடிகளை கூகுள் முதலீடு செய்யும் விஷயத்தை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம்.” என்று கூறினார்.
குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய ஃபைன்டெக் செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளத்தாக பிரதமர் மோடியிடம் உறுதியளித்துள்ளதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். குஜராத்தில் உள்ள காந்திநகர் தான் கிஃப்ட் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
கிஃப்ட் என்றால் குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டிஎன்று அர்த்தம். இந்த நகரில் தான் கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம் அமைய உள்ளது.
செயற்கை நுண்ணறிவில் பணிபுரியும் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் கூகுள் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகவும். அதன் ஒரு பகுதியாக, 100 மொழி முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். மிக விரைவில் பல இந்திய மொழிகளையும் அதில் கொண்டு வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் முக்கிய பிரச்சாரமான டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வையையும் அவர் பாராட்டினார். மேலும் டிஜிட்டல் பிரச்சாரம் என்பது மற்ற நாடுகள் பின்பற்ற விரும்பும் ஒன்றாகும் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
சுந்தர் பிச்சை மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் மோடியின் சந்திப்பின் போது, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஜெரோதா & ட்ரூ பீக்கன் இணை நிறுவனர் நிகில் காமத், ஓப்பன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் போன்றவர்களும் கலந்து கொண்டனர். மேலும் அடுத்த ஆண்டிற்குள் கூகுள் நிறுவனம் தங்களது முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ளும் என்றும் சுந்தர் பிச்சை உறுதியளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




