ஸ்ரீ 18ம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..! விமர்சையாக நடந்த விழாவில் திரளாக பங்கேற்ற பக்தர்கள்..!

வானில் வட்டமிட்ட கருடன்கள்!
 மெய்சிலிர்க்க வைத்தை நாடகம்

புகழ்பெற்ற அ.கீழக்கோட்டை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம், வெகுவிமரிசையாக செப்.8ம் தேதி நடைபெற்றது. முளைப்பாரி ஊர்வலம், வாணவேடிக்கைகளுடன் நடந்த விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற்றனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள அ.கீழக்கோட்டை. இங்குள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் ஆலயம், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு குலதெய்வமாகும். மதுரை அருகேயுள்ள அழகர்மலையில் இருக்கும் 18ம்படி கருப்பர் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து, இங்கு ஆலயம் அமைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

 

அ.கீழக்கோட்டையில் உள்ள ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் ஆலயம், மிகவும் சக்தி வாய்ந்தது; பல்வேறு சிறப்பு பெற்றது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் இதற்கென திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின.

 

திருப்பணி குழுவினரின் அயராத பக்தி, கடும் உழைப்பு, உபயதாரர்களின் தாராள நன்கொடைகளால், ரூ.18 லட்சம் மதிப்பில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. பரிவார தெய்வங்களுக்கு தனி மேடையும், 18ம்படி கருப்பருக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டது.

கருப்பரின் அழகிய திருமேனி சிலை, காரைக்குடி மாத்தூரில் உள்ள சிற்ப கலைக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. 3¼ அடி உயரத்தில் கருப்பர் சிலை, 1¼ அடி உயரத்தில் வலம்புரி விநாயகர் சிலை, நந்தி சிலை பரிவார தெய்வங்களுக்கு பீடம், சப்த கன்னிமார்களுக்கு ஆதாரபீடத்துடன் லிங்கம் சிலை உள்ளிட்டவை, ஸ்தபதி பாண்டி குழுவினர் செய்து முடித்தனர்.

 

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 8ம் தேதி வியாழக்கிழமை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜைகள் முதல் நாளாக செப்டம்பர் 7ம் தேதி மாலை 4 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் தொடங்கின.

 

பெண்கள், ஒருவாரம் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தனர். கருப்பரின் மனம் குளிர்ந்ததை வெளிப்படுத்தும் வகையில், முளைப்பாரிகள் நன்கு செழித்து வளர்ந்து பசுமையாக இருந்தன. அன்றைய தினம் இரவு 8-30 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.

 

செப்டம்பர் 7ம் தேதி இரவு 9:00 மணிக்கு வானவேடிக்கைகள், கீழக்கோட்டையை அதிரச்செய்தன. அதை தொடர்ந்து சின்ன கருப்பு, பெரிய கருப்பு நாடகம், தத்ரூபமாக அரங்கேறியது. இதை பக்தர்கள் வெகுவாக ரசித்தனர். நாடகத்தின் போது அருள் வந்த பக்தர்கள் சிலர் அருளாசி வழங்கி மெய்சிலிர்க்க வைத்தனர். கருப்பரின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள நாடகம் வழிவகுத்தது.

மறுநாள் காலை 8:00 மணிக்கு வினாயகர் பூஜையுடன் 2ம் கால யாக பூஜைகள் தொடங்கின. கோ பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. காலை 11:00 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து 11:30 மணிக்கு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. முதலில் விமான கும்பாபிஷேகம், அடுத்து மூலவர் மஹா கும்பாபிஷேகம் ஆகியன, மதுரை வி.ராஜாமணி குருக்கள் (எஸ். கிருஷ்ணன் குருக்கள், ரஸ்தா) தலைமையில் சிவாச்சார்யார்கள் செய்து வைத்தனர்.

 

கும்பாபிஷேக புனிதநீர் கலசங்கள் மீது அபிஷேகம் செய்த போது, வானில் 9 கருடன்கள் வட்டமிட்டு வந்தது, பக்தர்களை பரவசமடையச் செய்தன. இது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பிற்பகலில் பிரம்மாண்டமான அன்னதானம், மாலை வரை நீடித்தது.

 

இதை தொடர்ந்து, ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் ஆலய மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது, செப்டம்பர் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று தினமும் மாலை மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி நாள் மண்டகப்படி ராஜாமணி குருக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் சார்பில் கோவிலில் நந்தி சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தாம்பூலத்தட்டு, பூஜைப் பொருட்களையும் அவர் வழங்கியுள்ளார்.

 

கும்பாபிஷேக விழாவில் கமிட்டி நிர்வாகிகளில் தலைவர் எஸ்.பி. ராஜன், செயலாளர் மா.சேகர், பொருளாளர் மு.கண்ணதாசன், துணைத்தலைவர் மா.வேலுச்சாமி, துணைப் பொருளாளர் சு.ராமக்கண்ணன்,செய்தித் தொடர்பாளர் மு.தெய்வீகராஜன் செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், நல்லதம்பி, மு. கருணாகரன், உள்ளிட்ட நிர்வாகிகளும், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள், பக்தகோடிகள் கலந்து கொண்டு ஸ்ரீ கருப்பரின் அருளாசி பெற்றனர்.

கும்பாபிஷேக விழாவுக்கு திருவாடானை காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அலங்கார மின்விளக்குகள், வண்ண வண்ண தோரணங்கள், கண்கவரும் எழில்மிகு பந்தல் என கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் பிரம்மாண்ட முறையில், சிறப்பாக செய்யப்பட்டு இருந்ததை பக்தர்கள் வெகுவாக பாராட்டினர். பக்தர்களின் மனம் குளிர்ந்ததைப் போலவே ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பரின் மனமும் குளிர்ந்து அருளாசி நல்குவார் என்பதில் சந்தேகமில்லை.

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர்!

பொதுவாக நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம் என்று, பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் கருப்பசாமி காட்சி தருவார். நமது அ.கீழக்கோட்டை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

 

நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்) உள்ள கருப்பரின் நெற்றி; மிரட்டும் அவரது கூறிய பார்வை, முறுக்கிய மீசை, கம்பீரமாக உள்ளது. கருப்பரின் வலது கையானது வீச்சரிவாளுடன் ஓங்கியவாறு வீரத்தை பறைசாற்றுகிறது. மறு கையில் கதை, மண்ணை தொட்டபடி உள்ளது. முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி வீற்றிருக்கிறார்.