தமிழகத்தில் ஒரே சமயத்தில் கந்த சஷ்டி அவதூறு, பெரியார் சிலை அவமதிப்பு என இரு விவகாரங்கள் சூடாகிப் போன நிலையில் எந்த விவகாரத்தை ஆதரிப்பது? கண்டிப்பது ? என்பதில் நம் அரசியல் கட்சிகளுக்கு பெரும் குழப்பமாகிவிட்டது போலும். பெரியார் சிலை அவமதிப்புக்கு முந்திக் கொண்டு கண்டன அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், கந்த சஷ்டி கவசத்தை இழித்துப் பேசியவர்களை கண்டிக்காதது ஏன்? என விமர்சனங்கள் எழுந்த நிலையில், திமுக தரப்பில் லேட்டாக மவுனம் கலைந்து, முருகரை பழித்துப் பேசியது கண்டிக்கத்தக்கது அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. திருவாய் மலர்ந்துள்ளார்.
கறுப்பர் கூட்டம் என்ற ஒரு கூட்டம், கந்தசஷ்டி கவசம் பற்றியும், தமிழ்க் கடவுள்கள் பற்றியும் இழிவுபடுத்தி யூட்யூப்பில் தொடர்ந்து வெளியிட்ட வீடியோ விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் இந்துத்வாவாதிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். நான்கு நாட்களாக இந்த விவகாரம் சூடாகி மாநில அளவில் போராட்டங்களிலும் பாஜக தரப்பினர் குதிக்க பிரச்னை விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது.
இந்த கந்த சஷ்டி சர்ச்சையில், தமிழகத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என பிரதான திராவிடக் கட்சிகள் முதல், தமிழ் கடவுள் என் அப்பன் முருகன் என வாய் கிழிய பேசும் சீமான் வரை என குட்டிக் கட்சிகளின் தலைவர்கள் மவுனம் சாதித்தது பாஜக தரப்பை ரொம்பவே உசுப்பேற்றி விட்டது எனலாம்.
இதனால், பாஜக தேசிய பொதுச் செயலாளராக எச்.ராஜா, முருகக் கடவுளை இழிவுபடுத்தியவர்களை மு.க.ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி போன்றவர்கள் கண்டிக்காதது ஏன்? மவுனம் சாதிப்பது ஏன் என கொந்தளித்திருந்தார். இந்த விஷயத்தில் ஆளும் கட்சியான அதிமுக, பாமக ஆகியவையும் அடக்கியே வாசித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் தான் முருகனை பழித்ததற்கு பழிக்குப் பழி என்பது போல, நேற்று கோவையல் நடந்த பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசிய விவகாரம் மேலும் ஒரு பூதாகார சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. பெரியார் சிலைக்கு சாயம் பூசிய விவகாரத்தில் உடனே துடிதுடித்துப் போய் மு.க.ஸ்டாலின், வைகோ என பலரும் வரிசை கட்டி கண்டனங்களை கணைகளாக தொடுத்தனர். இங்கு தான் ஆளும் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளுக்கு குழப்பம் வந்துவிட்டது என்றே கூறலாம்.
லேட்டாக வந்த கண்டன குரல்
கந்த சஷ்டி கவச சர்ச்சையில் மவுனம் கலைக்க ஆரம்பித்து, அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி என அடுத்தடுத்து கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து சீமான், பாமக டாக்டர் .நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் என தலைவர்கள் லேட்டாக தற்போது கந்த சஷ்டி இழிவு விவகாரத்துக்கும் கூடவே பெரியார் சிலை அவமதிப்புக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதில், கந்த சஷ்டி விவகாரத்தில் தொடர் மவுனம் சாதித்து வந்த திமுக தரப்பிலும் மவுனம் கலைத்துள்ளதுதான் ஹைலைட் சமாச்சாரம் .இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரை பழித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதாக டுவிட்டரில் போலி தகவலை பதிவிட்டு தற்போது பிரச்சனைகளை திசைத்திருப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இப்படி அற்பத்தனமான செயலை செய்கின்றனர். கருணாநிதி ஆட்சியில் இந்துக்கோவில்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன. அனைத்து மதத் தலைவர்களும் திமுகவுடன் தொடர்பில் இருந்துள்ளனர். திமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளனர். திருவாரூர் தேரை ஓட வைத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் என இந்துக்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல என வக்காலத்து வாங்குவது போல் ஆர்.எஸ்.பாரதி திமுக தரப்பு கருத்தை பதிவிட்டுள்ளார்.