“ஊரடங்கு நீட்டிப்பு தவிர பிரதமர் உரையில் புதிதாக ஏதுமில்லை!!” ஏழைகளை பொருட்டாக நினைக்கவில்லை..! ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிரதமர் உரையில் ஊரடங்கு நீட்டிப்பு தவிர வேறொன்றும் புதிதாக இல்லை என்றும், ஏழைகளின் வாழ்வாதாரமும், உயிர் வாழ்தலும் மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்தது முதலே, மத்திய அரசுக்கு பல்வேறு யோசனைகளையும், ஆலோசனைகளையும் பசிதம்பரம் முன்வைத்து வருகிறார். கொரோனாவை வென்றெடுக்க ஊரடங்கு அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ப.சிதம்பரம், ஊரடங்கால் ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களின் கையில் பணத்தை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். குறைந்த பட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் வழங்க வேண்டும். அதற்கு வழியும் உள்ளது என ப.சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

 

இதனால், பிரதமர் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார் என்ற செய்தி வெளியானதும், பிரதமரின் உரையில் இன்னென்ன அம்சங்கள் இடம் பெறும் என எதிர் பார்க்கிறேன் என முன்கூட்டியே தமது எதிர்பார்ப்பை பதிவிடும் ப.சிதம்பரம், பிரதமர் உரை முடிந்தவுடன் அது பற்றியும் தனது கருத்தை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இன்று காலை 10 மணிக்கு பிரதமர் உரையாற்றப் போகிறார் என்ற அறிவிப்பு நேற்று வெளியானதுமே, நாட்டு மக்களைப் போலவே நானும் ஆவலுடனும் கவலையுடனும் பிரதமர் உரையை எதிர்பார்க்கிறேன் எனக் கூறி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் . ஊரடங்கை 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

 

ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி தான். அரசிடமும் பணம் இருக்கிறது. மத்திய அரசின் 2020-21 வரவு -செலவு பட்ஜெட்டில் ரூ. 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம் . நம்முடைய பணம். இந்த ரூ. 30 லட்சம் கோடியில் ரூ .65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா? மாட்டாரா? என்பது தான் கேள்வி.நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். தனது உரையில் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று வருகிறோம் என்பதை பெருமையாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஊரடங்கை வரும் மே 3-ந்தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார். ஆனால், ஊரடங்கில் பாதிக்கப்படுவோருக்கு என்ன நிவாரணம் என்பதை பிரதமர் மோடி வழக்கம் போல எதையும் கூறவில்லை.

இந்நிலையில், பிரதமர் மோடியின் உரை, ஏழை மக்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் தான் என்று கூறி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ப.சிதம்பரம் தனது பதிவில், பிரதமர் மோடியின் உரையில் ஊரடங்கு நீட்டிப்பு என்பதைத் தவிர புதிதாக ஏதுமில்லை. ஏழைகளின் வாழ்வாதாரமும் உயிர் வாழ்தலும் மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை போலும். கொரோனா தடுப்புக்கு அதிகம் நிதி தேவை என்ற மாநில அரசுகளின் கோரிக்கைக்கு பிரதமரின் உரையில் பதில் ஒன்றும் இல்லை.

 

பொருளாதார அறிஞர்களின் அறிவுரைகளை பிரதமர் கருத்தில் கொள்ளவில்லை.ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, பிரபாத் பட்நாயக் ஆகிய நிபுணர்களின் யோசனை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. முதலில் 21 நாட்கள் இப்போது மேலும்19 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்தும், பாதிக்கப்படும் மக்களுக்கான நலத்திட்டங்களை பிரதமர் அறிவிக்கவில்லை. அரசிடம் பணம், உணவுப் பொருட்கள் இருந்தும் அதனை வழங்காமல் கைவிடப்பட்டுள்ளனர் என ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்,


Leave a Reply