--- --:--:-- --

ஊரடங்கு காலத்தில் போலீஸ் எனக்கூறி மக்களிடம் பணம் பறித்த கொள்ளையன்!

6.1

சிவகங்கையில் ஊரடங்கு நேரத்தில் போலீஸ் என கூறி வாகன சோதனையில் ஈடுபட்ட இளைஞர் சிக்கியுள்ளார்.போலீஸ் என்று கூறி வீட்டை விட்டு வெளியே வருபவர்களை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் என்ன நடந்தாலும் அதை திருடுவதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர் சிக்கியது எப்படி?

 

சிவகங்கை அருகே கூட்டுறவு பட்டியை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொரொனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் அதை பயன்படுத்தி கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளார். சிவகங்கையை சுற்றியுள்ள சாலையில் தனியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை மறைத்து போலீஸ் என கூறி வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் பறித்துள்ளார்.

 

மேலும் வியாபாரிகள், இளைஞர்கள், பெண்கள் என்று பலரிடம் ரொக்கமாகவோ செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளார். பறிமுதல் செய்த பொருளை காவல் நிலையத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பியுள்ளார். இதையடுத்து பொருளை பறி கொடுத்தவர்கள் காவல் நிலையம் சென்று விசாரித்தபோது தான் அருண்பிரசாத் போலி போலீஸ் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அருண்பிரசாத் பெருமாள்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தத அவனை சுற்றிவளைத்தனர். போலீசிடம் இருந்து தப்பிய திருடன் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றபோது திருமலை அருகே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

 

அதில் அருண் பிரசாத்தின் கை எலும்பு முறிந்ததையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காவலர் என்று கூறி வழிப்பறியில் ஈடுபட்ட அருண் பிரசாத் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அருண்பிரசாத்தை கைது செய்தனர்.

 

அவரிடமிருந்து கொள்ளையடித்த பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். சாதாரண நாட்களில் வழிப்பறி, கொள்ளை என்று சண்டித்தனம் செய்து வந்தவர் கொரொனா காலத்திலும் மக்கள் துயரத்தில் இருக்கும்போது போலீஸ் என கூறி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon