ஜவுளி, இரும்பு, சிமெண்ட், உரம், காகிதம், டயர் உள்ளிட்ட 13 தொழிற்சாலைகள் உற்பத்தியை துவங்கலாம்..! தமிழக அரசு அனுமதி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஜவுளி, உரம், இரும்பு, சிமெண்ட், டயர், காகிதம் உள்ளிட்ட 13 தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமான சில துறைகள் தவிர்த்து, அனைத்து உற்பத்தி மற்றும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்துவிதமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இப்படி திடீரென அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால், சில அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால், ஊரடங்கில் இருந்து சில துறைகளுக்கு அடுத்தடுத்து விதிவிலக்கு அளிக்கப் பட்டு வருகிறது. லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததால், காய்கறி, உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானதால், சில நாட்களுக்கு முன் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் 13 வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஜவுளி, இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், டயர்,உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 13 துறைகளைச் சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் எனவும், குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தியை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply