நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து சிறுபான்மை மருத்துவக் கல்லூரியான வேலூர் சிஎம்சி கல்லூரிக்கும் விலக்களிக்க கோரி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பு சரியாக உள்ளதாக தெரிவித்தது. மேலும் நீட்தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும், அதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து எப்படி விளக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்காக நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க முடியாது என குறிப்பிட்டனர்.
இதையடுத்து மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என சிஎன்சி தரப்பு வழக்கறிஞர் கூறினார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் பின்னர் மனுவை பெற அனுமதி அளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.