கட்டிட உரிமையாளர் கடையை காலி செய்யக் கூறி அடாவடி செய்வதாக போலீஸ் டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணை, அங்கும் கடையை காலி செய்யாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டிய கொடுமை அரங்கேறியுள்ளது. இதனால் அந்தப் பெண்மணி, கண்ணீர் மல்க எஸ்.பி.,க்கு வேண்டுகோள் விடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டிஎஸ்பி அலுவலகம் எதிரே ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் சுந்தரி என்பவர் தான், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: டிஎஸ்பி ஆபீஸ் எதிரே வாடகைக் கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறேன். எனக்கு கணவர் இல்லை; ஒரே மகனுடன் இந்தக் கடை வருமானத்தை நமபியே பிழைப்பு நடக்கிறது. இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் இந்துமதி, திடீரென கடையை காலி செய்யுமாறு தகராறு செய்கிறார்.௹1லட்சம் அட்வான்ஸ் தொகையையும் தர முடியாது என்கிறார்.
திடீரென காலி செய்யச் சொன்னால் எப்படி ?அவகாசம் வேண்டும் என கேட்டதற்கு அடாவடி செய்தார். இதனால் எதிரில் உள்ள டிஎஸ்பி அலுவலகம் சென்று அவரிடம் முறையிட்டேன். ஆனால் அவரோ இந்துமதிக்கு ஆதரவாகவே பேசினார். இந்துமதி தனக்கு வேண்டப்பட்டவர் என்றும் கடையை காலி காலி செய்யச் சொன்னால் காலி செய்ய வேண்டியதுதானே? என கட்டாயப்படுத்துவது போல் பேசினார். எனவே போலீசில் எந்த தீர்வும் கிடைக்காது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன் .
திடீரென காரைக்குடி போலீஸ் ஸ்டேஷன் சார்பு ஆய்வாளர் அழைப்பதாகக் கூறி அங்கு சென்றேன். அவரும் கடையை காலி செய்ய வேண்டியதுதானே? என்று மிரட்டினார். கோர்ட்டில் போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டினார். நான் மறுத்துவிட்டேன். அப்படியானால் எழுதிக் கொடுத்துவிட்டுப் போ.. நாளை கடையில் என்ன நடந்தாலும் போலீசுக்கு வரமாட்டேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு மிரட்டி அனுப்பி விட்டார்.
மறுநாள் காலையில் கடையைத் திறக்க சென்றபோது கடை உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சாமான்கள் எல்லாம் காணவில்லை. இந்தக் கொடுமையை இனி எங்கே போய் முறையிடுவேன். எனவே சிவகங்கை மாவட்ட எஸ்.பி., தலையிட்டு, இந்தப் பிரச்னையில் எனக்கு உரிய தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும் என அழுதபடி கண்ணீர் மல்க சுந்தரி என்ற அந்தப் பெண் வேண்டுகோள் விடுத்துள்ள வீடியோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.