இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, காவி நிற உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற படத்துடன் வாழ்த்து செய்தி வெளியிட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அந்தப் பதிவை நீக்கிவிட்டு பளிச் வெள்ளை உடையில் திருவள்ளுவர் இருக்கும் ஒரிஜினல் படத்தை பதிவிட்டு சமாளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் நாட்டையே காவி மயமாக்கப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. பள்ளிப் பாடப்புத்தகத்தில் மகாகவி பாரதியாரின் தலைப்பாகைக்கு காவி நிறம் பூசியது முதலில் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து உலகப் பொது மறைநூலான திருக்குறளை தந்த திருவள்ளுவரின் உடையையும் பாஜகவினர் காவி நிறமாக்கியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பாஜக ஆதரவாளர் எனக் கூறப்பட்ட சூப்பர் ரஜினி கூட, வள்ளுவருக்கு காவி நிறம் பூசியது போல, எனக்கும் காவி நிறம் பூசப் பார்க்கிறார்கள். ஆனால் திருவள்ளுவரும் சிக்க மாட்டார்; நானும் சிக்க மாட்டேன் என நறுக்கென்று கூறி பாஜகவுக்கு குட்டு வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டி பதிவிட்டிருந்தார். ஆனால், அந்தப் பதிவில், திருவள்ளுவர் காவி நிற உடையில் காட்சியளித்தது தான் சர்ச்சையாகி விட்டது. திமுக தரப்பில் மட்டுமின்றி பல தரப்பில் இருந்தும் துணை ஜனாதிபதியின் இந்தப் பதிவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.அத்துடன் வள்ளுவர் வெள்ளுடையில் பளிச்சென காட்சி தரும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தைத் தான் நாட்டின் துணை ஜனாதிபதி பதவிட்டிருக்க வேண்டும் எனவும் பலரும் அட்வைஸ்களை பதிவிட்டனர்.
இப்படி காவி உடையில் வள்ளுவரை பதிவிட்டதற்கு எழுந்த எதிர்ப்பால், அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. பின்னர் பளிச் வெள்ளை உடையில் காட்சியளிக்கும் வள்ளுவரின் ஒரிஜினல் படத்தை டிவீட் செய்து வாழ்த்துச் செய்தியும் பதிவிட்டு சமாளித்துள்ளார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு . ரஜினி கூறியது போல் வள்ளுவனுக்கு காவி நிறம் பூச முடியாதுதான். அது நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்தாலும் முடியாது தான் என்பது இன்றைய எதிர்ப்பு மூலம் நிரூபணமாகி விட்டது.






