டோல்கேட்களில் “பாஸ்ட்டேக்” கருவி வேலை செய்யவில்லையா..? ஓசிப் பயணம் செய்யலாம்..! பணம் கட்டி ஏமாற வேண்டாம்!!
வாகன ஓட்டிகள் பாஸ்ட் டேக் வசதி வைத்திருந்து டோல்கேட்களில் கருவி வேலை செய்யவில்லை எனக் கூறி பணம் கட்டச் சொன்னால் யாரும் கட்டிவிட வேண்டாம்.
இலவசமாகவே பயணம் செய்யலாம் என்கிறது அரசின் உத்தரவு .ஆனால் பல டோல்கேட்களில், அரசுக்கு வரி வசூலை குறைத்து காட்ட, திட்டமிட்டே பாஸ்ட்டேக் கருவி வேலை செய்யவில்லை எனக் கூறி பணம் பறிப்பதால் யாரும் ஏமாற வேண்டாம்.
நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களில் வாகனங்களுக்கு பாஸ்ட்டேக் கட்டாயம் என்பது நேற்று (15.01.2020) முதல் கட்டாயம் என்பது அமலுக்கு வந்துள்ளது.
டோல்கேட்களில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் எனக் கூறப்படுகிறது. ஆனால் தினம்ம் கோடிகளில் புழங்கும் டோல்கேட்களில், உண்மையான கட்டண வசூலை காண்பிக்காமல் குறைத்து காண்பித்து மோசடி நடக்கிறதாம்.
இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய வரியை மோசடி செய்வதை தடுக்கவும் தான் இந்த பாஸ்ட் டேக் முறை என்றும் கூறப்படுகிறது.பாஸ்ட் டேக் கார்டிலும், டோல்கேட்களில் கருவி வேலை செய்யவில்லை எனில், பயணம் இலவசம்; பணமாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
எனவே கடந்த டிசம்பர் முதல் பாஸ்ட்டேக் முறையில் கட்டணம் செலுத்துவது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருமுறை அவகாசம் நீடிக்கப்பட்டு இப்போது ஒரு வழியாக நடைமுறைக்கு வந்து விட்டது.நாடு முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் பாஸ்ட்டேக் முறைக்கு மாறிவிட்டனர்.

ஆனால் பாஸ்ட் டேக் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள, கருவி பழுது போன்ற காரணமெனில் பணம் செலுத்தத் தேவையில்லை. பயணம் இலவசம் என்ற முக்கியக் குறிப்பை பலரும் இன்னும் அறிந்திருக்கவில்லை போலும்.
இதனால் பல டோல்கேட் களில் வருவாயை குறைத்துக் காட்ட இன்னும் மோசடிகள் தொடர்வதாகவே தகவல்கள் வருகின்றன. டோல்கேட் களில் பாஸ்ட் டேக் கார்டை அடையாளம் கண்டு பணப்பரிவர்த்தனை செய்யும் கருவி இயங்கவில்லை எனக் கூறி பணமாக கட்டுங்கள் என்று வாகன ஓட்டிகளிடம் பணம் பிடுங்குவது தொடர்கிறது.
கருவி வேலை செய்யாவிட்டால் பணம் கட்டத் தேவையில்லை; ஓசிப் பயணம் செய்யலாம் என்ற விவரம் தெரியாத பலரும் அப்பாவித்தனமாக பணத்தை கட்டி ஏமாந்து செல்கின்றனர்.
ஆனால், ஏன் பணம் கட்ட வேண்டும் என விபரம் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பினால் உஷாராகி விடுகிறார்களாம். காரை முன்னும் பின்னும் நகர்த்தச் சொல்லி, கருவியை சும்மாக்காச்சும் சோதனை செய்வது போல் பாவ்லா செய்து விட்டு கருவி இப்போ வேலை செய்கிறது, என பாஸ்ட்டேக் மூலம் கட்டணம் வசூலித்து விடுகின்றனராம்.
இவ்வளவு காலமும் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய வரியை செலுத்தாமல் ஏமாற்றியவர்கள், இப்போது இந்த நூதன முறையில் மோசடி செய்து இன்னும் ஏமாற்றவே பார்க்கின்றனர். இப்போது வாகன ஓட்டிகள் இனிமேலாவது ஏமாற வேண்டும்.
பாஸ்ட் டேக் கருவி வேலை செய்யவில்லை என்று கூறினால், அப்போ நான் ஓசியிலேயே போறேன் என ஆக்ஸிலேட்டரை அழுத்தி விட வேண்டும். காசு மட்டும் கொடுத்து ஏமாந்து விடக் கூடாது. அப்போதுதான் டோல்கேட்காரர்களின் அட்டூழியமும், வரி மோசடியும் முடிவுக்கு வரும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




