திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு மங்களம் உறுதி..! போனால் போகட்டும், எங்களுக்கு நட்டமே இல்லை என துரைமுருகன் சாட்டையடி!!

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் போனால் போகட்டும்; ஓட்டே இல்லாத கட்சியால் எங்களுக்கு எந்த நட்டமும் கிடையாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறி விட்டதால் காங்கிரசுக்கு திமுக மங்களம் பாடிவிட்டதாகவே தெரிகிறது.

 

தமிழகத்தில் திமுக – காங்., இடையேயான கூட்டணி தொடருமா? என்பது இப்போது கேள்விக்குறியாகி விட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை தான் கூட்டணிக்கு வேட்டு வைத்துவிட்டது எனலாம். இது தான் சாக்கு என காங்கிரசை கழட்டி விட முடிவு செய்து திமுக வீராப்பு காட்ட ஆரம்பித்து விட்டது. அறிக்கை விட்ட கே.எஸ்.அழகிரியே, ஒன்றுக்கு மூன்று தடவை, கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை; திமுகவும் காங்கிரசும் பிரிக்க முடியாத இணைந்த கைகள்; இரு கட்சிகளும் கொள்கை கூட்டணி வைத்துள்ளன என்றெல்லாம் கூறி, தாம் விட்ட அறிக்கைக்கு மன்னிப்பு கேட்காத குறையாக மன்றாடுவது போல் பேட்டி மேல் பேட்டி கொடுத்தாலும் திமுக மசிவதாக தெரியவில்லை. திமுக தரப்பில், காங்கிரஸ் சங்காத்தமே இனி வேண்டாம் என திட்டவட்டமாக முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.

 

காங்கிரசுடன் கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு, காலம் தான் பதில் சொல்லும் என நேற்று டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். அப்போதே, இதுதான் சங்கதி தெரிந்து விட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக திமுக மூத்த தலைவர்களில் முக்கியமானவரும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இன்று கூறியுள்ளது காங்கிரசுக்கு திமுக ஒரேயடியாக மங்களம் பாடிவிட்டதாகவே தெரிகிறது. எங்கள் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி போனால் எங்களுக்கு எந்த நட்டமில்லை. அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் ஓட்டே கிடையாது. அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. கூட்டணியை விட்டு போனால் போகட்டும் என கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக காங்கிரசை மட்டம் தட்டியுள்ளார். இதனால் திமுக – காங்., கூட்டணி என்பது இனி வரும் நாட்களில் சாத்தியமில்லை என்றே தெரிகிறது.


Leave a Reply