சென்னையில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒன்று திண்டுக்கல்லில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த ஜானி என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருடைய 8 மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பெண் ஒருவர் கடந்த 12ஆம் தேதி கடத்திச் சென்றார். இதற்கு அடுத்த சில மணி நேரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பரிசினா என்பவரின் இரண்டு வயது பெண் குழந்தை ரஷிதா கடத்திச் செல்லப்பட்டார்.
12 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பெண் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவருடைய பெயர் தீபக் மண்டல் என்பதும், அவர் வைத்திருந்த குழந்தை சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட ரஷிதா என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக்கை கைது செய்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஓராண்டில் ரயில் நிலையங்களில் இருந்து காணாமல் போன 242 குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்து இருப்பதாக ரயில்வே டிஎஸ்பி எட்வர்டு தெரிவித்துள்ளார்.