தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40ஆக உயர்த்த அரசு திட்டம்?

தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 37 ஆக உயர்த்தப்பட்டது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெரிய மாவட்டமாக இருந்த வேலூரை பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உதயமாகின .

 

இதன் தொடர்ச்சியாக புதிதாக உருவான மாவட்டங்களின் நிர்வாக பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டன. இந்நிலையில் புதிதாக மேலும் 3 மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திலிருந்து எடப்பாடியை தனி மாவட்டமாக உருவாக்க முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பல ஆண்டுகளாக எழுந்துவரும் கோரிக்கையான கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியும், நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையும் தனி மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான அறிவிப்பை நடப்பு தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்களின்படி புதிதாக மூன்று மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 40 ஆக உயரும்.


Leave a Reply