“நித்தி மீதான விசாரணை தீவிரமாகிறது” : கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

சாமியார் நித்யானந்தா வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தால் அவரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்து போன தனது மகள் மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி திருச்சியை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

 

அதில் நித்யானந்தா வெளிநாட்டில் இருப்பதாக தெரிய வருவதாகவும், ஆகையால் அவரை அந்த நாட்டிலிருந்து அழைத்துவர அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் அமைப்பானது உரிய நீதிமன்றத்தை நாடி ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் வாங்கி நித்தியானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசைஉள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

 

ஒருவேளை நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியாவிட்டால் இப்புகாரை விசாரிக்கும் அமைப்பானது சிபிஐ அல்லது இன்டர்போலை அணுகி ரெட் கார்னர் நோட்டீஸ் வாங்கி அவரை இந்திய அழைத்துவர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

இதற்கு தேவையான முறைப்படியான கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஜான்சி ராணிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள பதில் கடிதம் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.


Leave a Reply