தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தள்ளுமுள்ளு, கைது சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறியுள்ளன.

 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னை சென்ட்ரலில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

சென்னை கிண்டியில் மௌன போராட்டத்தில் ஈடுபட முயன்ற வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உள்பட 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் மதுரை கோரிப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் குவிந்ததால் காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர். அனைவரும் பேரணியாக சென்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


Leave a Reply