அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா..! எத்தனை காலம் திமுக, அதிமுக என மாறுவது..? பாஜகவில் ஐக்கியமான ராதாரவி!!

திமுக, அதிமுக என அடிக்கடி கட்சி தாவி வந்த நடிகர் ராதாரவிக்கு திராவிடக் கட்சிகள் மீது சலிப்பு வந்து விட்டது போலும். இப்போது ஒரேயடியாக பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.

 

நடிகர் ராதாரவி… சினிமாவில் தான் வில்லன் நடிகர் என்றால், அரசியலிலும் தமது வாய்க் கொழுப்பால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டவர்.

 

ஆரம்ப காலத்தில் திமுகவில் நீண்ட காலம் பயணித்த ராதாரவி, திடீரென ஜெயலலிதா காலத்தில் அதிமுகவுக்கு தாவினார். அந்தக் கட்சி சார்பில் எம்எல்ஏவாகவும் சில காலம் இருந்தார். அதிமுகவின் முக்கிய பிரச்சார பீரங்கியாகவும் இருந்தார். ஆனால் அங்கும் அவரது பயணம் நீடிக்கவில்லை.திடீரென அதிமுகவில் இருந்து விலகிய ராதாரவி மீண்டும் திமுக பக்கம் வந்தார்.

 

கடந்த மார்ச் மாதம் கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில், நடிகை நயன்தாரா குறித்து, வாய்க்கொழுப்பாக ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையானது. இதனால் ராதாரவியை கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்வதாக திமுக அறிவித்தது.

அதென்ன நீங்கள் சஸ்பென்ட் செய்வது, நானே கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று திமுகவில் இருந்து விலகுவதாக வீராப் பாக அறிவித்தார் ராதாரவி .அடுத்த சில நாட்களில் முதல்வர் எடப்பாடியைச் சந்தித்த ராதாரவி, அதிமுகவில் சேர்ந்தார். ஆனால் அதிமுகவிலும் அவருக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்காததுடன், யாரும் கண்டுகொள்ளவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

இதனால் மனம் நொந்து, கடந்த சில மாதங்களாக அமைதி காத்து வந்தார் ராதாரவி . திமுக, அதிமுக என மாறி, மாறி மீண்டும் திமுக பக்கம் சென்றால் கொஞ்சம் கூட மரியாதை இருக்காது என்று நினைத்தாரோ என்னவோ? ஒரேயடியாக தேசிய நீரோட்டத்தில் கலப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலும். அதுவும் பாஜகவில் தான் இப்போது ராஜ மரியாதையுடன் வரவேற்பு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு விட்டார்.

 

இதையடுத்து, இன்று சென்னை வந்த பாஜக செயல் தலைவர் கே.பி.நட்டாவை, விமான நிலையத்திலேயே சந்தித்த ராதாரவி, ஒரேயடியாக பாஜகவில் ஐக்கியமாகி விட்டார். இனி, தமிழக மேடைகளில் பாஜகவுக்கும்,பிரதமர் மோடிக்கும், ஆதரவாக தமது வழக்கமான கரகர குரலில் ஓங்கி முழங்கப் போகிறார் ராதாரவி .


Leave a Reply