கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுடனான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. ஆலோசனை நடைபெற்றதாக வெளியாகும் தகவலில் எந்த உண்மையும் இல்லை.ரஜினியும் கமலும் இணைவதில் அதிமுகவுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. தொண்டர்களால் உருவான இயக்கம் அதிமுக.எனவே எங்கள் கட்சியின் அடித்தளம் பலமாகவே உள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த கூட்டணியே வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். கூட்டணிக் கட்சிகள் கூடுதலாக சில இடங்களை கேட்கத்தான் செய்வார்கள். பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் சுமூகப்பேசி உடன்பாடு எட்டப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.