மதுரையில் வைரஸ் காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு !

மதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் கடந்த 11 மாதங்களில் 276 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மதுரை வில்லாபுரத்தில் செந்தில்குமார், ராஜமீனா தம்பதியின் 7 வயது மகளான யாஷினி. கடந்த 3 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதைப்போல காய்ச்சல் பாதிப்புகள் மாவட்டம் முழுவதும் பரவியுள்ளன. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை ஜனவரி மாதம் தொடங்கி இந்த மாதம் வரை 128 பேர் டெங்கு காய்ச்சலாலும், 148 பேர் வைரஸ் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜூன்குமார் தெரிவித்தார்.

 

எந்த காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும், சுய மருத்துவம் கூடாது என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் டெங்கு கொசுக்கள் பெருகாமல் தடுக்க விழிப்புணர்வு தேவை என்று கூறும் மருத்துவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக தண்ணீர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.


Leave a Reply