தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால (ஏப்.15-ஜூன் 15) நிவாரணம், மீன்பிடி குறைவு கால நிவாரணம் (அக்., நவ.,), தேசிய மீனவர் சேமிப்பு நிவாரணம் வழங்கப்படுகிறது.. இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டமான மீன்பிடி குறைவு கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக உள்ள குடும்பத் தலைவரின் வங்கி கணக்கில் , இந்த நிவாரணம் செலுத்தப்படுகிறது.
குடும்பத்தலைவர் இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு விநியோகிக்கப்பட்ட நிவாரணம், கணவரை இழந்த மீனவ பெண்களுக்கு எவ்வித காரணமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த இராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் மும்தாஜ் பேகம் தலைமையில் மீனவ பெண்கள் ஏராளமானோர், மக்கள் குறைதீர் நாளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் இன்று மனு அளித்தனர்.
பாதிக்கப்பட்ட மீனவ பெண்களின் குடும்ப சூழ்நிலை கருதி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி குறைவு கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.