ஆற்றில் நீந்திச் சென்று சடலத்தை அடக்கம் செய்யும் அவலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லாததால் ஆற்றில் நீந்திச் சென்று கல்லூரி மாணவரின் சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது. ஓமலூர் அருகே உள்ள சர்வங்க ஆற்றங்கரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுடுகாடாக பயன்படுத்திவந்தனர். கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில் பாத்தியம் பட்டியைச் சேர்ந்த பிரசன்னா பிரியன் என்ற கல்லூரி மாணவர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் ஆற்றங்கரைக்கு எடுத்து சென்றனர் அப்போது ஆற்றில் தண்ணீர் வந்ததால் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் லாரி டியூப்பில் காற்றை நிரப்பி அதன் மீது சடலத்தை வைத்து ஆற்றில் இருந்து எடுத்து சென்றனர்.

 

இதன்பின்னர் ஆற்றின் மறுகரையில் கல்லூரி மாணவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. முறையான சுடுகாடு வசதி இல்லாததும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்காதது தான் இது போன்ற அவல நிலைக்கு காரணம் என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Leave a Reply