வெட் கிரைண்டர் களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கோவாவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி சலுகைகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும், ஏற்றுமதி செய்வதற்காக வெள்ளி நகைகளை இறக்குமதி செய்வதற்கும் உலர்ந்த புளிகளுக்கும் ஜிஎஸ்டி கிடையாது என்றும் அறிவித்தார். வீடுகளில் பெருமளவு பயன்படுத்தப்படும் வெட் கிரைண்டர் களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.
மீன் துகள்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று அக்டோபர் மாத இறுதிவரை மீன்களுக்கான ஜிஎஸ்டி வரி கிடையாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பாதுகாப்பு துறைக்கான பொருட்கள் மீது 2024 ஆம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
10 இருக்கைகள் முதல் 13 இருக்கைகள் வரை கொண்ட வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து சலுகை என்றும் இத்தகைய வாகனங்களுக்கு 1 முதல் 3 சதவீதம் வரை மட்டுமே வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.






