அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நாட்டின் மக்கள் அனைவரும் மதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் இவ்வாறு பேசினார். 70 ஆண்டுகள் அயோத்தி வழக்கில் இன்னும் ஓரிரு மாதங்களில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ராமர் கோவில் கட்டுவது குறித்து சிலர் கூச்சலிட்டு வருவதாகவும் அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கூப்பிய கரத்துடன் கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். ராமர் கோவில் கட்ட சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசுக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அக்கட்சியின் பிரதமர் இவ்வாறு மறைமுகமாக விமர்சித்து உள்ளதாக கருதப்படுகிறது.
இதற்கிடையில் காஷ்மீரை புதிய சொர்க்க பூமியாக மாற்றிய தங்கள் அரசு பாடுபட்டு வருவதாகவும் ஆனால் அங்கு கலவரத்தை தூண்ட எல்லைக்கு அப்பால் இருந்து சில சக்திகள் முயன்று வருவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.