கஞ்சா விற்பனை செய்யப்படுவதை எதிர்த்ததால் ஒரு குடும்பமே வன்முறையின் கோரப் பற்களுக்கு இறை ஆகியுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் ரத்தம் உறைந்து கிடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த தனஞ்ஜெயன் ஊர் நாட்டாமையாக இருந்தவர். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் இடையே பல ஆண்டாக முன்விரோதம் இருந்து வந்தது.
அந்த முன்விரோதத்திற்கு காரணம் கஞ்சா விற்பனை. ரவுடிகளை வைத்து கட்ட பஞ்சாயத்து செய்வது கஞ்சா விற்பது என பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் புருஷோத்தமன். இந்நிலையில். கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தனஞ்ஜெயன் தகவல் அளித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் தனஞ்சயன்.
ஆத்திரமடைந்த புருஷோத்தமன் புகாரை வாபஸ் பெறுமாறு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். மிரட்டலுக்கு அடிபணியாத தனஞ்ஜெயன் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன்படி அவர் வீட்டுக்கு காவலர்கள் சிலர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காலையில் ஒரு காவலாளி மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது யாரும் எதிர்பாராத வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது ரவுடிகள் கூட்டம். கைகளில் ஆயுதங்களோடு. கோவிந்தவாடி கிராமத்துக்குள் அதிரடியாக புகுந்தனர்.
சிசிடிவி கேமராக்கள் இருந்ததை உடைத்து அதில் உள்ள ஹார்ட் டிஸ்க்குகளை திருடி கொண்டனர். பாதுகாப்புக்கு இருந்த காவலர் சுதாரித்துக் கொள்வதற்குள் வீட்டில் அதிரடியாக நுழைந்த ரவுடிகள் வீட்டில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினார். அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்த தனஞ்செயன் ஓட ஓட விரட்டிச் சென்று புருஷோத்தமன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
படுகாயங்களுடனரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொடூர தாக்குதலில் தனஞ்சயனின் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 2 நபர்கள் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள காவல்துறையினர் தப்பியோடிய புருஷோத்தமன் உள்ளிட்ட ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்.