நீலகிரி கனமழையால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய மு.க.ஸ்டாலின்

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அப்போது, அனுமாபுரம், இந்திரா நகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த அமுதா, அவரது மகள் பாவனா ஆகியோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியின்போது மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட திமுக செயலர் பா.மு.முபாரக், கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் திராவிடமணி, முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலர் ஜே.ரவிக்குமார், நிர்வாகிகள் ஜார்ஜ், கே.ஏ.முஸ்தபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதையடுத்து நடுவட்டம், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார்.

கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண முகாமில் உள்ள ஓவேலி பகுதி மக்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி, நிவாரணப் பொருள்களை வழங்கினார். பின்னர், தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி முகாம், அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இதேபோல, பந்தலூர், சேரம்பாடி, சேரங்கோடு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


Leave a Reply