குஜராத்தில், வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி, இடுப்பளவு தண்ணீரில், 1.5 கி.மீ., நடந்து சென்று காப்பாற்றிய போலீஸ்காரருக்கு, பாராட்டு குவிகிறது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சில நாட்களாகவே, பல மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.தவிப்புமோர்பி மாவட்டத்தையும், வெள்ளம் புரட்டி எடுத்தது. அங்குள்ள, கல்யாண்பூர் என்ற கிராமத்தை, வெள்ளம் சூழ்ந்ததால், மீட்புக் குழுவினர், அங்கு வசித்தவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றினர். இந்த கிராமத்தைச் சேர்ந்த, 5 வயது மதிக்கத்தக்க, இரண்டு குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கி, கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
கிராமத்தை, 1.5 கி.மீ., சுற்றளவுக்கு, வெள்ளம் சூழ்ந்திருந்தது. மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த, பிரித்விராஜ் சிங் ஜடேஜா என்ற கான்ஸ்டபிள், இரண்டு குழந்தைகளையும், தன் தோளில் அமர வைத்தார்.பாராட்டுபின், இடுப்பளவு தண்ணீரில், மிகவும் சிரமப்பட்டபடி, 1.5.கி.மீ., துாரத்தை கடந்து சென்று, குழந்தைகளை பாதுகாப்பான பகுதியில் இறக்கி விட்டார்.இது தொடர்பான, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, முதல்வர் விஜய் ரூபானி, அந்த போலீஸ்காரருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
‘கடினமாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், குஜராத் போலீசில், பலர் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிறந்த எடுத்துக்காட்டு, பிரித்விராஜ் சிங் ஜடேஜா’ என, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர், வி.வி.எஸ்.லக் ஷ்மண், துார்தர்ஷன் பிரசார் பார்தி இயக்குனர், சுப்ரியா சாஹு உள்ளிட்ட ஏராளமானோர், பிரித்விராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.