விக்ரமசிங்கபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் கைலாஷ் குடிபோதைக்கு அடிமையானவன் என்று கூறப்படுகிறது.இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான அவன் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி நீலாவதியை அடித்து துன்புறுத்தியுள்ளான். வழக்கம் போல் திங்கள் கிழமை இரவும் போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளான். இருவரது சண்டையையும் அவர்களது 7 வயது மகள் சுகிர்தா விலக்க முயற்சித்து இருக்கிறார்.
அப்போது பெற்ற குழந்தை என்றும் பாராமல் போதை மயக்கத்தில் சுகிர்தாவின் வயிற்றிலும், கழுத்திலும் கடுமையாக தாக்கியுள்ளான், கைலாஷ். இதில் குழந்தை துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தது. குழந்தை மயக்கம் அடைந்து விட்டதாக எண்ணி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சுகிர்தா மாடியில் இருந்து விழுந்து மயக்கம் உற்றதாக மருத்துவர்களிடம் அவர்கள் தெரிவித்து உள்ளனர். சுகிர்தாவை பரிசோதித்து பார்த்து இறந்துவிட்டதை உறுதி செய்த மருத்துவர்கள் பெற்றோரின் பேச்சில் நம்பிக்கை இன்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.
இதற்குள் குழந்தை சுகிர்தாவை மயானத்தில் வைத்து எரியூட்டவே சென்று விட்டனர் அவரது உறவினர்கள். விரைந்து வந்து சடங்குகளை தடுத்த போலீசார் பெற்றோரிடம் துருவிதுருவி விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து குழந்தையை கொன்றதற்காக கைலாஷையும், கொலையை மறைத்ததாக நீலாவதியையும் கைது செய்தனர். குடிமயக்கத்தில் இரக்கம் அற்ற அரக்கனாக மாறிய கைலாஷின் செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.