கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளது: வியாபாரிகள் சம்மேளனத்தினர் புகழாரம்

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளதாக கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் கோவை சாய்பாபா காலனி கிளை சார்பாக உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் குடும்ப நல நிதி வழங்கும் விழா கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

 

தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இவ்விழாவில் கிளை தலைவர் ஆனந்தம் மற்றும் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து மறைந்த சங்கத்தின் துணை தலைவர் திருமணி குடும்ப்த்திற்கு சங்க நிர்வாக குழு சார்பாக ரூபாய் நான்கு இலட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

முன்னதாக சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசுகையில்,கோவை மாநகர காவல் துறையினரின் அறிவறுத்தலின் பேரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருவதாகவும்,இதனால் தற்போது கடைகளில் ஏற்படும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பிளாஸ்டிக் தடை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் தமிழக அரசு வணிகர்களுக்கு பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பைகள் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும் எனவும் அரசு அனுமதிக்கும் பிளாஸ்டிக் பைகளில் முத்திரை போன்ற அடையாளத்தை பதிப்பதன் மூலம் வியாபாரிகளிடையே உள்ள குழப்பங்கள் தீரும் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் சுதாகர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.