கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் கடந்த திங்கள் கிழமை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கடந்த 4 நாட்களாக மேற்கு வங்க மாநிலம் முழுவதும் இளநிலை மருத்துவர்கள் நடத்தும் போராட்டத்தில் சீனியர் மருத்துவர்களும் பங்கு கொண்டதால் அங்கு மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு அவசர சிகிச்சை பிரிவுகள் குறைந்த மருத்துவர்களுடன் இயங்கி வரும் நிலையில் வெளி நோயாளி பிரிவுகள் மருத்துவர்கள் இன்றி மூடப்பட்டுள்ளன. அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவர்களும் போராட்டத்தை தொடங்கி உள்ளதால் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைகள் பாதிக்கும் சூழல் நிலவி வருகிறது.
பெங்கால் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்புயின்மையை உணர்த்தும் வகையில் தலையில் கட்டுபோட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.