இலங்கை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேரில்வரவேற்றார். மாலத்தீவில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடி இன்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய மோடியை சிறுவர் சிறுமியர் வெற்றிலை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அந்த சிறுவர் சிறுமியரின் தலையில் கை வைத்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
இதை தொடர்ந்து மோடியை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்று நலம் விசாரித்தார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அதிபர் அலுவலகம் சென்ற மோடி மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதை தொடர்ந்து முன்னாள் அதிபர் ராஜ பக்சேவையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்து மோடி பேச உள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி நான்கு ஆண்டுகளில் இலங்கைக்கு மூன்றாவது முறையாக வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனது நண்பர்களை இந்தியா ஒரு போதும் மறவாது என்று கூறியுள்ள மோடி தனக்கு அளிக்கபட்ட வரவேற்பு நெகிழ்ச்சியடைய செய்ததாக கூறினார்.