மான் வேட்டை இருவர் கைது! ஒற்றைக்குழல் துப்பாக்கி வெடிப்பொருட்கள் மான் இறைச்சி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் மான் வேட்டையாடியதாக இருவர் கைது.வேட்டைக்கு பயன்படுத்தியதாக ஒற்றைக்குழல் துப்பாக்கி, வெடிப்பொருட்கள் மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அருகே சிறுமுகை வனப்பகுதியில் யானை,காட்டெருமை,சிறுத்தை,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.இந்த நிலையில் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை, புதுக்காடு,சிட்டே பாளையம்,அம்மன் புதூர்,சம்பரவள்ளி புதூர் உள்ளிட்ட பவானி சாகர் நீர்த்தேக்கப் பகுதிகளில் அனுமதியின்றி பலர் விவசாயம் செய்து வருகின்றனர்.

 

இவர்கள் இப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியே வரும் மான்களை வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக சிறுமுகை வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிறுமுகை வனச்சரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் பெத்திக்குட்டை கருப்பராயன் கோவில் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்பொழுது,சந்தேகத்திற்குரிய வகையில் அவ்வழியே வந்த மூன்று இருசக்கர வாகனங்களில் ஏழு பேர் கொண்ட மர்ம நபர்களை வனத்துறையினர் மடக்க முற்பட்ட பொழுது தேவராஜ், குமாரசாமி இருவர் மட்டும் சிக்கியுள்ளனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் பகலில் விவசாய பணியிலும், இரவில் வேட்டையாடுவதிலும் இக்கும்பல் ஈடுபட்டு மானை வேட்டையாடியதும்,இறைச்சியை விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

 

அதனையடுத்து இருவரையும் கைது செய்த சிறுமுகை வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 15 கிலோ எடையுள்ள மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய ஒற்றைக்குழல் துப்பாக்கி,வெடி பொருட்கள்,இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும்,தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.பின்னர்,இருவரையும் கைது செய்த சிறுமுகை வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Leave a Reply