எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட சோனியா வியூகம்! முக்கிய கட்சிகளுடன் மே 23இல் ஆலோசனை கூட்டம்!!

மத்தியில் அடுத்த அரசு அமைப்பது தொடர்பாக விவாதிக்க, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை, வரும் 23ஆம் தேதி, சோனியா காந்தி கூட்டியுள்ளார்.

 

மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. கடைசி மற்றும் 7ஆவது கட்ட தேர்தல், வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, வரும் 23இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தல் முடிவுக்கு பிந்தய சூழல், அடுத்து அரசு அமைப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டது.

 

மேலும், இது தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ஆம் தேதி, முக்கிய ஆலோசனை நடத்த, சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

 

இதில் பங்கேற்க, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத மாநில கட்சிகள் பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும், காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

 

ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் சோனியா காந்தி, தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். எனினும் கூட்டணி கட்சிகள் தவிர மற்றவை இதில் பங்கேற்பது, கடைசி நேரத்தில் தான் தெரிய வரும் என்று கருதப்படுகிறது.


Leave a Reply