தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவல்ல! கமலஹாசன் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி!

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் நாதுராம் கோட்சே என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

கமல்ஹாசனின் கருத்துக்கு பாஜக, அ.தி.மு.க., பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மத கலவரத்தை தூண்டும் வகையில் கமல்ஹாசன் பேச்சு அமைந்துள்ளதாக கூறி, அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்; அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து, ஆங்கில தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ஒருவர் தீவிரவாதியாக இருந்தால், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply