மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்து விரோதத்தை பரப்புகிறார்; அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்று, மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் எச்சரித்துள்ளார்.
முதல் தீவிரவாதி இந்து என்று, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் கூறியது, அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள், வழக்குகள், மிரட்டல்கள், புகார்கள் என்று, கமலஹாசனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கி. வீரமணி, காங்கிரஸ் தலைவர் அழகிரி, திருமாவளவன் உள்ளிட்ட சிலர், கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கமலின் பேச்சை வன்மையாக கண்டித்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் இன்று நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக பேசியுள்ளார். கமல்ஹாசன் வேறு மதத்திற்கு மாறி, இந்துக்கள் மீதான விரோத கருத்துகளைப் பரப்பி வருகிறார். அவரை மன்னிக்கப் போவதில்லை.
இந்துக்களை தீவிரவாதிகள் என்று கூறும் கமலை, தமிழகத்தில் நடமாட விடமாட்டோம். இந்து விரோத நடிப்பை திரையுலகில் காட்டுவதற்கு பதிலாக, அவர் பொது உலகில் காட்டுகிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்யக் கோரி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.
கமலஹாசனுக்கு எதிராக ஆன்மிக மடாதிபதிகளும் தற்போது கருத்து வெளியிட்டிருப்பது, இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கி இருக்கிறது.