35 சோதனைச்சாவடி, 4123 போலீசார்! சூலூர் இடைத்தேர்தல் ஏற்பாடு சூப்பரப்பு!!

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூரில், பாதுகாப்பு பணிகளுக்காக 4123 போலீசார், 35 சோதனைச்சாவடிக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்.

 

கோவை சூலூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில், தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தலைமையில் நடந்தது. இதில், தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

 

பின்னர், செய்தியாளர்களுக்கு தேர்தல் பிரிவு டிஜிபி அளித்த பேட்டி:

 

சூலூர் தொகுதியில், 35 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சூலூரில் 66 வாக்குசாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.

 

பணம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளைக் முழுமையாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூலூர் தொகுதியில் மட்டும் இதுவரை 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சூலூர் தேர்தல் பணிக்காக 4123 போலீசார் பணியில் ஈடுபடுவர். 35 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். அதிகாரிகளை மாற்ற வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை கொடுத்தது பற்றிய கேள்விக்கு, சில ரகசிய தகவல்களை வெளியிட முடியாது என்றார்.

 

இக்கூட்டத்தில், தேர்தல் பிரிவு ஐஜி சேசாயி, மேற்கு மண்ட காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை மண்டல காவல்துறை துணை தலைவர் கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், கோவை எஸ்.பி சுஜித்குமார், திருப்பூர் எஸ்.பி கயல்விழி, கோவை மாநகர துணை காவல் ஆணையர் பாலாஜி சரவணன், டி.எஸ்.பிக்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.


Leave a Reply