உயிர் போகும் நாளிலும் அதிமுகவில் தான் இருப்பேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓ.பி.எஸ்.

பா.ஜ.க.வில் நான் சேரப்போவதாக வெளியாகும் தகவல்கள் வடிகட்டிய பொய்; உயிர் போகும் நாளிலும் நான் அதிமுகவில் தான் இருப்பேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வம், பா.ஜ.க.வுடன் மிக அதிக நெருக்கம் காட்டி வருபவர். அண்மையில் வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கலின் போது ஓ.பி.எஸ். நேரில் சென்று கலந்து கொண்டார்.

 

டெல்லி அளவில் பா.ஜ.க. தலைவர்களுடன் ஓ.பி.எஸ். நெருக்கம் அதிகரித்து வந்ததை, அவரது ஆதரவாளர்கள் சிலரே ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதற்கிடையே, ஓ.பி.எஸ். பாரதிய ஜனதாவில் சேர்ந்து விடுவார் என்றெல்லாம் தகவல்கள் பரவின.

 

இன்று செய்தியாளர்களை சந்தித்தி அ.ம.மு.க. தலைவர் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். காவி வேட்டி கட்டிக் கொண்டு பாஜகவில் சேர்ந்துவிடலாம் என்று கூட கிண்டல் செய்திருந்தார்.

 

இந்த நிலையில், தன்னை பற்றி பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஓ.பி.எஸ். இது குறித்து அவர் கூறுகையில், நான் பாஜகவுக்கு செல்கிறேன் என்பது வடிகட்டிய பொய் என்று மறுத்துள்ளார்.

 

உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன். என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் அதிமுக தொண்டர்களும், மக்களும் ஏற்கமாட்டார்கள்.

மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் வெற்றியை நினைத்து சில குள்ளநரிகள் என் மீது வதந்தி பரப்புகின்றனர். அதிமுகவில் எளிய தொண்டனாக இருந்து கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன் என்று அவர் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.


Leave a Reply