தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், வெயில் அதிகம் கொளுத்தினால், அதில் மாற்றம் செய்யப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. ஒரு சில தினங்களில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலும் தொடங்கவுள்ளது. இது, மே மாத கடைசியில் முடிந்தாலும், இந்தாண்டு வெயிலின் தாக்கம் ஜூன் வரை இருக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், வெயில் நீடித்தால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் செய்வது பற்றி முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் எந்தக் காலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது. இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுக வெற்றிபெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மு.க. ஸ்டாலினை தளபதியாக மட்டுமே அக்கட்சியினர் ஏற்றுள்ளார்கள்; அவருக்கு தலைமை தாங்குகின்ற வாய்ப்பு எப்போதும் இல்லை என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.