‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீஸ் துணையாக உள்ளது’; பெண்ணுக்கு ஆடியோவில் பகீர் மிரட்டல் விடுத்த 3 பேர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை திரும்பப் பெற வேண்டும்; போலீஸ் எங்களுக்கு துணையாக உள்ளது என்று, பெண்ணுக்கு 3 பேர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர்களை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ எடுத்தும் மிரட்டி வந்த விவகாரம், தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவையே உலுக்கியது. இதில் ஆளுங்கட்சியினரின் தொடர்பு இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட, விவகாரம் இன்னும் சூடுபிடித்தது.

 

இந்த விவகாரம் தொடர்பாக, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், புகார் செய்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஐந்து பேர் கைதானார்கள். அவர்களில் 4 பேருக்கு ஜாமீன் கிடைத்தது.

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திய போது, பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பலரும் புகார் செய்தனர். இந்த சூழலில் தான் வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. தற்போது தீவிர விசாரணை நடக்கிறது.

 

இச்சூழலில், இவ்வழக்கில் புகார் செய்த ஒரு இளம்பெண்ணின் மொபைல்போனை தொடர்பு கொண்டு, வழக்கை வாபஸ் பெறும்படி 3 பேர் மிரட்டும் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தற்போது வெளியாகியுள்ள முதல் ஆடியோவில், எங்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்; இல்லாவிட்டால், கொலை செய்து விடுவேன். நான் பொள்ளாச்சியில் இருந்து பேசுகிறேன். நீ கொடுத்த புகாரை ஏன் இன்னும் வாபஸ் பெறவில்லை? சொன்னால் கேட்க மாட்டாயா? இனி உன்னிடம் கெஞ்ச மாட்டேன், வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால், முதலில் உனது கணவரையும், பிறகு உன்னையும், உனது குடும்பத்தையும் தூக்குவேன் என, மிரட்டுகிறார்.

 

மற்றொரு ஆடியோ பதிவில், வழக்கை வாபஸ் பெற்றுவிடு. இல்லை என்றால் வெளிநாட்டில் இருக்கும் உனது கணவர் வீடு திரும்ப முடியாது என்று, ஒருவர் மிரட்டுகிறார். மூன்றாவது ஆடியோவில் பேசும் நபர், போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் எங்களுக்கு தான் துணையாக இருக்கிறார்கள். நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் அந்த புகாரின் நகல் எங்களிடமே வந்து விடும். எனவே, உடனடியாக வழக்கை வாபஸ் பெறு என்று மிரட்டுவதாக உள்ளது.

 

இதில், சில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் அந்த 3 பேர் குறிப்பிட்டு உள்ளனர். இந்த ஆடியோ உண்மையானதா? அல்லது போலியாக சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார்களா என்பது, விசாரணைக்கு பிறகே தெரிய வரும். எனினும் இந்த சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Leave a Reply