தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த ஃபனி புயல், தற்போது திசை மாறி ஒடிசா பக்கம் திரும்பியுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் புயல் கரையைக் கடக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஃபனி புயல், இன்று காலை நிலவரப்படி, சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருந்தது. இது, நாளை அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.
இந்த புயல் தற்போது, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது. வரும் மே 1ஆம் தேதிக்கு பின், தனது பாதையை மாற்றி வடகிழக்கு திசையை நோக்கி பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஃபனி புயல் கரையைக் கடக்காது; ஒடிசாவில் புயல் கரை கடக்க வாய்ப்புள்ளதா என்பது, தொடர் கண்காணிப்புக்கு பிறகு அறிவிக்கப்படும்.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறுகையில், ஃபனி புயல், நாளை அதிதீவிர புயலாக மாறக்கூடும். ஏப்.30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை இருக்கலாம். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றார்.