வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடவில்லை; அங்கு அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திய மோடி, உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார். நாளை அந்த தொகுதியில் பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் தரப்பில், பிரியங்கா காந்தி நிறுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. பிரியங்கா காந்தியும், கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் வாரணாசியில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்.
ஆனால், வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும், வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து அஜய் ராய்தான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு எதிராக பிரியங்கா விரும்பினாலும், சோனியாவும், ராகுலும் அதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வலுவான வேட்பாளரை, அதுவும் பிரதமரை எதிர்த்து போட்டியிட்டால், தோல்விக்கான வாய்ப்புகளே அதிகம். பிரியங்காவின் அரசியல் பயணம் தோல்வியில் தொடங்க வேண்டாமென்று கருதியே, அவரை நிறுத்தும் முடிவில் இருந்து காங்கிரஸ் பின்வாங்கியதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.